திருஞானசம்பந்தர் தேவாரம் |
முதல் திருமுறை |
1.26 திருப்புத்தூர் பண் - தக்கராகம் |
வெங்கள் விம்மு வெறியார் பொழிற்சோலைத்
திங்க ளோடு திறைக்குந் திருப்புத்தூர்க்
கங்கை தங்கு முடியா ரவர்போலும்
எங்கள் உச்சி உறையும் இறையாரே.
|
1 |
வேனல் விம்மு வெறியார் பொழிற்சோலைத்
தேனும் வண்டுந் திளைக்குந் திருப்புத்தூர்
ஊனம் இன்றி யுறைவா ரவர்போலும்
ஏன முள்ளும் எயிறும் புனைவாரே.
|
2 |
பாங்கு நல்ல வரிவண்டிசைபாடத்
தேங்கொள் கொன்றை திளைக்குந் திருப்புத்தூர்
ஓங்கு கோயில் உறைவா ரவர்போலுந்
தாங்கு திங்கள் தவழ்புன் சடையாரே.
|
3 |
நாற விண்ட நறுமா மலர்கவ்வித்
தேறல் வண்டு திளைக்குந் திருப்புத்தூர்
ஊறல் வாழ்க்கை யுடையா ரவர்போலும்
ஏறு கொண்ட கொடியெம் இறையாரே.
|
4 |
இறை விளங்கும் எழில் சூழ்ந் தியல்பாகத்
திசை விளங்கும் பொழில்சூழ் திருப்புத்தூர்
பசை விளங்கப் படித்தா ரவர்போலும்
வசை விளங்கும் வடிசேர் நுதலாரே.
|
5 |
வெண்ணி றத்த விரையோ டலருந்தித்
தெண்ணி றத்த புனல்பாய் திருப்பத்தூர்
ஒண்ணி றத்த ஒளியா ரவர்போலும்
வெண்ணி றத்த விடைசேர் கொடியாரே.
|
6 |
நெய்த லாம்பல் கழுநீர் மலர்ந்தெங்குஞ்
செய்கண் மல்கு சிவனார் திருப்பத்தூர்த்
தையல் பாகம் மகிழ்ந்தா ரவர்போலும்
மையுண் நஞ்சம் மருவும் மிடற்றாரே.
|
7 |
கருக்கம் எல்லாங் கமழும் பொழிற்சோலைத்
திருக்கொள் செம்மை விழவார் திருப்பத்தூர்
இருக்க வல்ல இறைவ ரவர்போலும்
அரக்கன் ஒல்க விரலால் அடர்த்தாரே.
|
8 |
மருவி யெங்கும் வளரும் மடமஞ்ஞை
தெருவு தோறுந் திளைக்குந் திருப்பத்தூர்ப்
பெருகி வாழும் பெருமா னவன்போலும்
பிரமன் மாலும் அறியாப் பெரியோனே.
|
9 |
கூறை போர்க்குந்த தொழிலா ரமண்கூறல்
தேறல் வேண்டா தெளிமின் திருப்புத்தூர்
ஆறும் நான்கும் அமர்ந்தா ரவர்போலும்
ஏறு கொண்ட கொடியெம் இறையாரே.
|
10 |
நல்ல கேள்வி ஞான சம்பந்தன்
செல்வர் சேடர் உறையுந் திருப்புத்தூர்ச்
சொல்லல் பாடல் வல்லார் தமக்கென்றும்
அல்லல் தீரும் அவலம் அடையாவே.
|
11 |
திருச்சிற்றம்பலம் |